சென்னையில் காதலி ரயில் முன் தள்ளிவிட்டு கொலை? காதலனிடம் காவல்துறை தீவிர விசாரணை
சென்னை பல்லாவரம் அருகே இளம் பெண் ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்த நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை பல்லாவரம் வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன் (வயது 44). இவரது மனைவி விமலா (40). இவர்களின் மூத்த மகள் ஹேமிதா (19). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயதிலிருந்து படித்து வந்துள்ளார்.
9ம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் மாஸ்டர் அஜய் (26) என்பருக்கும் ஹேமிதாக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வர, படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்துள்ளனர். அதன் பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது.
பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கும் போது மீண்டும் அஜய்யும், ஹேமிதாவும் நேரில் சந்தித்து தங்களது காதலை தொடர்ந்துள்ளனர். ஹேமிதா பயன்படுத்திய செல்போனை அவரது பெற்றோர் வாங்கிக் கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், தன் காதலிக்கு புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
கடந்த 27ம் தேதி இரவு ஹேமிதா வீட்டில் அனைவரும் வழக்கம் போல் தூங்கி உள்ளனர். பின்னர் காலையில் எழுந்து பார்த்தபோது ஹேமிதாவை காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தினர் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தன் மகளை காணவில்லை என பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காவல் நிலையம் மற்றும் ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து தேடி வந்தனர்.
அப்பொழுது தாம்பரம் ரயில்வே இருப்பு பாதை காவல் துறையினர் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே இளம் பெண்ணின் சடலம் ஒன்று இருப்பதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் அங்கு சென்று அங்க அடையாளங்களை பார்த்த போது காணாமல் போன ஹேமிதாவின் உடல் என தெரியவந்தது.
நாட்டிலேயே மிகப்பெரிய முதலீட்டாளர்கள் மாநாடு விரைவில் நடத்தப்படும் - தொழில்துறை அமைச்சர் தகவல்
அதன் பிறகு உடலை மீட்ட ரயில்வே காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பல்லாவரம் காவல் துறையினரின் முதல் கட்ட விசாரணையில் ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது 28ம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே திருநெல்வேலியில் இருந்து எழும்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த அதிவிரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
ஹேமிதா இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஹேமிதாவின் காதலன் அஜய் மீது சந்தேகம் அடைந்த காவல் துறையினர் அவரை பல்லாவரம் காவல் நிலையம் அழைத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.