கர்நாடக சட்டமன்றத்தில் இன்று  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கு முன்னாள் முதல்வர் எடியூரப்பா செக் வைத்துள்ளார்.

மதசார்பற்ற ஜனதாதள கூட்டணியில் காங்கிரஸ் உள்பட 15 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அளித்தனர். இதையொட்டி, தற்போதைய முதல்வர் குமாரசாமி, தனது அரசின் பெரும்பான்மை பலத்தை இழந்து விட்டதாக எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.

இதனால், முதல்வர் குமாரசாமி உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், 2 சுயேச்சை எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துள்ளதாக கூறிய எடியூரப்பா, அவர்கள் 2 பேரும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.

சட்டமன்ற விவகாரக் குழுவிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை குமாரசாமி அரசு சந்திக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என இன்று வலியுறுத்த போவதாக எடியூரப்பா தெரிவித்தார். இதனால் குமாரசாமி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஆனாலும், நாளை உச்சநீதிமன்றம் எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பாக முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்கும் வரை நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிவைக்க குமாரசாமி அரசு முயற்சிக்கிறது. இதற்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்களில் ஒருவரான நாகராஜ், முதலமைச்சர் குமாரசாமியையும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவையும் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், அவரும் திடீரென மும்பையில் மற்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்கியுள்ள நட்சத்திர விடுதிக்கு சென்று விட்டார். இதனால் குமாரசாமி அரசின் தலைக்கு நேராக கத்தி தொங்குவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.