கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கி கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல எழுத்தாளரும் பாடல் ஆசிரியருமான பிரான்சிஸ் கிருபா விடுவிக்கப்பட்டார். 

பிணத்துக்கு அருகே அமர்ந்திருந்த எழுத்தாளர் பிரான்ஸிஸ் கிருபாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் தனது பெயர் பிரான்சிஸ் கிருபா என்றும் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவர் குறித்து நடத்திய விசாரணையில், அவர் பிரபல எழுத்தாளர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அங்கிருந்த சிசிடிவி கேமாராவை சோதித்த போலீஸார், மாரடைப்பால் மரணமடைந்ததும் அவரை காப்பாற்ற பிரான்சிஸ் கிருபா முயற்சி செய்ததும் தெரிய வந்தது. 

இதனை உறுதி செய்து கொண்ட காவல்துறையினர் பிரான்ஸிஸ் கிருபாவை விடுதலை செய்தனர். பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார். திரப்படங்களில் பாடல்களையும் எழுதியுள்ளார்.