இந்தியாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் கொடிய வைரஸ் நோய் தமிழகத்திலும் அசுரவேகம் எடுத்திருக்கிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வந்த பாதிப்பு எண்ணிக்கை கடந்த 3 நாட்களாக தினமும் 500ஐ கடந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 771 பேருக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,829 ஆக உயர்ந்திருக்கிறது.

தற்போதைய நிலவரப்படி 1,516 பேர் கொரோனாவில் இருந்து பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருக்கின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் இன்று மரணமடைந்துள்ளார். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை 36 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கியிருக்கிறது. பூந்தமல்லியை சேர்ந்த 56 வயதான பெண் ஒரு வருடமாக சிறுநீரகப் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துள்ளார். இதனால் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் நேற்று ஒரே நாளில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,328 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.