கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

மதுரை விமானநிலையத்தில் செய்தியார்களுக்கு பேட்டியளித்த ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வடகிழக்கு மழைகாலங்களில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா வைரஸ் மட்டுமின்றி டெங்கு போன்ற நோய்களுக்கான தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.  தற்போது மத்திய சுகாதாரதுறை அமைச்சர் வடஇந்தியா பகுதிகளில் குளிர்காலங்களில் ஏற்படும் பிரச்சனை குறித்து கூறிய நிலையில் தமிழகத்தில் நோய்தடுப்புக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து நோய்த்தொற்று படிப்படிப்பாக குறைந்து வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தென்மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் ஒரு நாளைக்கு 450 கொரோனா நோயாளிகள் வருவது குறைந்து தற்பொழுது 100க்கும் கீழாக குறைந்துள்ளது. மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கு ஏற்படுத்தப்படபோவதாக வதந்தி குறித்த கேள்விக்கு  சமூக வலைதளங்கிளில் வரும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். ஒவ்வொரு பணிக்கும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதும் எனவும், பண்டிகை காலங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசங்கள் அணிந்தும் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

மேலும், கொரோனா பாதித்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் ஏற்படுவதாக வரும் வதந்தியை நம்ப வேண்டாம். தடுப்பூசி வரும் வரை பொதுமக்கள் முகக்கவசங்களை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.