சென்னையில் கல்லூரி மாணவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட வேண்டிய அளவிற்கு தேவை என்ன? நாராயணன் திருப்பதி
பல்லாவரத்தில் ஒரு பெண்ணிடம் எண் பலகை இல்லாத இரு சக்கர வாகனத்தில் சங்கிலி பறித்த இரு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை.
ஆடம்பர வாழ்க்கை, அலைபேசி மற்றும் டாஸ்மாக் மதுவுக்கு அடிமையாவது ஆகியவையே மாணவர்களின் பணத்தேவைக்கு சங்கிலி பறிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணம் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் அம்சவள்ளி (48). இவர், பல்லாவரம் பம்மல் சாலையில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் இரண்டு இளைஞர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க சங்கலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பித்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அவர்களை புரசைவாக்கத்தில் வைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கல்லூரிகள் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு செயின் பறிப்பில் ஈடுபட வேண்டிய அளவிற்கு தேவை என்ன? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநிலத்துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பல்லாவரத்தில் ஒரு பெண்ணிடம் எண் பலகை இல்லாத இரு சக்கர வாகனத்தில் சங்கிலி பறித்த இரு கல்லூரி மாணவர்களை கைது செய்துள்ளது சென்னை மாநகர காவல்துறை. கல்லூரி மாணவர்களுக்கு செயின் பறிப்பில் ஈடுபட வேண்டிய அளவிற்கு தேவை என்ன? அந்த மாணவர்கள் சென்ற இருசக்கர வாகனமும் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேலானது.
அக்கறையின்மை, வேலைப்பளு மற்றும் வாட்ஸ்-அப், தொலைக்காட்சி ஆகியவையே மாணவர்களின் மீதான பெற்றோரின் கவனசிதறல்களுக்கு காரணம். வசதியான வாழ்க்கை, பெட்ரோல், ஆடம்பர வாழ்க்கை, அலைபேசி மற்றும் டாஸ்மாக் மதுவுக்கு அடிமையாவது ஆகியவையே மாணவர்களின் பணத்தேவைக்கு சங்கிலி பறிக்கும் நிலைக்கு தள்ளப்படுவதற்கான காரணம். இந்த விவகாரத்தில் பல்லாவரத்தில் பறித்த குற்றவாளிகளை காவல்துறை நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களின் உதவியோடு புரசைவாக்கத்தில் பிடித்துள்ளது பாராட்டுக்குரியது.
சிறைக்கு செல்லும் அந்த மாணவர்களின் வாழ்க்கை வீணானது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என்று தெரிவித்துள்ளார்.