தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், 12 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, வேலுார் உள்ளிட்ட நகரங்களில் வெயில் கொளுத்தியெடுக்கிறது. பொதுவாக மரங்கள் அடர்ந்திருக்கும் கிராமப்புறங்களில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். இம்முறை கிராமப்புறங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருப்பதாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் 12 நகரங்களில் வெயிலின் அளவு 100 டிகிரியைத் தாண்டியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 109 டிகிரியும், திருத்தணியில் 108 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது. வேலுாரில் 106 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்கிடையே வெப்பச்சலனத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் அப்பகுதிகளில் வெப்பத்தின் அளவு சற்று குறைந்ததாக அந்தப் பகுதிவாசியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.