சென்னை நகர மக்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் தண்ணீர்ப் பற்றாக்குறை பூதாகரமாகிவருகிறது. இந்நிலையில் சென்னையில் தண்ணீர் தேவையைப் பூர்த்தி அரசு எடுத்த நடவடிக்கை குறித்து உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 
வேலூரில் கால்வாயில் கழிவுநீர் கலப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை புறநகர்ப் பகுதியில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை சுட்டிக்காட்டிய உயர் நீதிமன்றம், சென்னை குடிநீர் தேவையைப் பற்றி அரசுக்கு கேள்வி எழுப்பியது.
 விசாரணையின்போது, கிழக்குக் கடற்கரை சாலை மற்றும் பிற பகுதிகளில் கடல் நீரை குடி நீராக்கும் ஆலைகளின் நிலவரம் என்ன, எத்தனை ஆலைகள் செயல்படுகின்றன, அந்த ஆலைகள் மூலம் எவ்வளவு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது என்ற கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பாக ஜூன் 17-க்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.