நீரின்றி அமையாது உலகு... பருவ மழை பொய்த்து போய்விட்டது. நிலத்தடி நீர் வற்றிக்கொண்டே வருகிறது. ஒரு லாரி தண்ணீர் 3500 ரூபாய். அதுவும் 15 முன்னரே பதிவு செய்தால் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் நிலை இப்படிதான் மாறிவிட்டது.சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் முற்றிலும் வறண்டு போயுள்ளதால் சென்னைக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சென்னையில் ஐ.டி., நிறுவனங்கள் மிகுந்துள்ள ஓ.எம்.ஆர் சாலையையும் கூட, தண்ணீர் பஞ்சம் விட்டுவைக்கவில்லை. 

சென்னை பெருநகர குடிநீர் வாரியத்தின் சார்பில் 15 நாட்களுக்கு ஒரு முறையே தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தண்ணீர் இல்லாததால் விடுதியை காலி செய்துவிட்டு இளைஞர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர். பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் தங்களை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி புரிய அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே வீடுகளின் கிணறுகளில் உள்ள நீரைப் பயன்படுத்துவதால் தோல் நோய் பிரச்சினைகள் ஏற்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீர் இணைப்பு கூட முறையாக வழங்கப்படவில்லை என்பதும் பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தேவையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும் ஏரி, குளங்களை தூர்வாரவும், மழை நீரை சேமித்தால் மட்டும இப்பிரச்சனைக்கு தீர்வை எட்ட முடியும்.வருங்கால சந்தததியினருக்கு இதுபோன்ற தண்ணீர் பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னோர்கள் வகுத்த நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த உறுதிகொள்ள வேண்டும்.