ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க  திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னையில் இன்று, போக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆய்வு கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்; சி40 என்ற பன்னாட்டு அமைப்பு மூலம் சென்னை, கோவை, மதுரையில் மின்சார பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

நாட்டில் நிலவி வரும் சுற்றுசுசுழுல் மாசுபாட்டைக் குறைக்கும் முயற்சியில் தற்போது தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக தமிழகத்தில் சென்னையில் முதல் முறையாக மின்சார பேருந்து திட்டத்திற்கு கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் தமிழக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக சி40 நிறுவனத்திற்கும், போக்குவரத்து துறைக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தானது என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், கடந்த பிப்ரவரி மாதம் தமிழகத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில், சென்னை, கோவை, மதுரையில் முதல்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, ஜெர்மன் வங்கி உதவியோடு 12,000 பேருந்து மற்றும் 2,000 மின்சார பேருந்துகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.  சென்னையில் முக்கிய வழித்தடங்களில் சார்ஜிங் பாயிண்ட் அமைக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், மின்சார பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சார்ஜிங் பாய்ண்ட் குறித்த விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் விரைவில் புதியதாக சுமார் 1500 பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.