உலக நாடுகளை கடந்து, கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தன்னுடைய கோர முகத்தை காட்டி வருகிறது. குறிப்பாக சென்னையில் வசித்து வரும், மக்கள் தான், மற்ற மாநிலங்களை விட அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா வைரஸில் இருந்து மக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது என, மத்திய மாநில அரசுகள், ஒரு புறம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், பிரபலங்கள் பலரும், தங்களால் முடிந்தவரை, வீட்டில் இருந்தவாறு, வீடியோ வெளியிட்டு தங்களுடைய ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவு, போலீஸ் பாதுகாப்பு என பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்தாலும், கொரோனா வைரஸின் தீவிரம் தெரியாமல் பலர் அடிக்கடி வெளியில் சுற்றி திரிவதால், கொரோனா தாக்கமும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் விஜய் நடித்த ’தேவா’ அஜித் நடித்த ’வான்மதி’ ஆகிய படங்கள் உள்பட பல படங்களில் நடித்த நடிகை சுவாதி தற்போது வீடியோ ஒன்றின் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார். அவர் இது குறித்து அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது:

பொறுமையாக இருப்போம். இந்த ஊரடங்கு உத்தரவுக்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் . ரஜினி சார் கூறியது ஒரு வசனம் தான் எனக்கு ஞாபகம் வருகிறது. கொரோனாவை ஒழிக்க ஒரே ஒரு வழி தான் உள்ளது. தனிப்பட்ட முறையில் சுத்தமாக இருப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் சானிடைசர் வைத்து கைகளை கழுவுவது. போன்றவற்றை நாம் செய்தால் கொரோனாவை முழுமையாக அழிக்க முடியும்.

எனவே உங்களிடம் நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்வது என்னவெனில், ‘வீட்டில் இருங்கள், பத்திரமாக இருங்கள், முக்கியமாக முதியவர்களை பாதுகாப்புடன் பார்த்துக்கொள்ளுங்கள், குழந்தைகளுடன் அன்பாக இருங்கள்’ என அந்த வீடியோவில் நடிகை ஸ்வாதி கூறியுள்ளார்.

இவரின் இந்த விழிப்புணர்வு வீடியோ சமூக வலைத்தளத்தையே கலக்கி வருகிறது.