திருச்சி, மதுரை உள்பட பல்வேறு இடங்களில் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், கணக்கில் வராத பல லட்சம் சிக்கியது.

ஆடி மாதம் தொடங்குவதற்கு முன், ஏராமானோர் தங்களது நிலங்கள், வீடுகளை பத்திரப்பதிவு செய்து வருகின்றனர். இதையொட்டி, சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சம் வாங்குவதாக, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் பத்திரப்பதிவுக்காக கொண்டு வந்த ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரத்துக்கு மேலாக நடந்த சோதனையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய்  கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக, சார்பதிவாளர் பாலு உள்பட 9 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், கோவை சரவணம்பட்டி உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய திடீர் சோதனையின்போது, சார் பதிவாளர் அம்சவேணியின் மேஜையில் இருந்து கணக்கில் வராத ரூ.80 ஆயிரத்த்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஊழியர்கள் வைத்திருந்த கணக்கில் வராத ரூ.70 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இதனால் சோதனை முடியும் வரை ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் ரூ.43 ஆயிரம் சிக்கியதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் தீவிரமாக விசாரிக்கின்றனர். தொடர்ந்து நாமக்கல், சிதம்பரம், செஞ்சி, குன்னூர், அரியலூர், செக்கானூரணி ஆகிய இடங்களிலும் சோதனை நடந்தது. இதில் பல லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.