நல்லெண்ண அடிப்படையில் முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அஜித் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்ய பால் திருடப்படலாம் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக பொன்னுசாமி பால் முகவர்களுக்காக தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அத்திரைப்படம் வெளியாகிற திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் "முன்னணி நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம்" செய்கிறோம் என்கிற பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்கள் வீணாக்குவதையே வாடிக்கையாக கொண்டிருப்பதை நாம் அனைவருமே நன்கறிவோம். உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும், "ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்" என்கிற முயற்சியில் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜீத், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் கவனத்திற்கும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை பதிவு தபால் மூலமாக கொண்டு சென்றதோடு, தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் கவனத்திற்கும் கூட கொண்டு சென்றிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி "உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும்" என சென்னை பெருநகர காவல் ஆணையரிடமும், காவல்துறை தலைவரிடமும் கடந்த காலங்களில் பலமுறை புகார் மனு அளித்துள்ளோம். ஆனால் இதுவரை நம்முடைய கோரிக்கைகள் எவர் காதிலும் விழுந்ததாக தெரியவில்லை. அத்துடன் "ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளுக்கு பயன்படுத்த மேற்கண்ட முன்னணி நடிகர்கள் எவரும் துளியளவு முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரிய விசயமாகும். "நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுப்பதில் பால் முகவர்கள் சங்கத்திற்கு என்ன அக்கறை...?" என பல தரப்பிலிருந்தும் வினாக்கள் எழுகின்றன. முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் உள்ள பால் முகவர்களின் கடைகளுக்கு முன்பிருந்து அவர்களின் ரசிகர்கள் பாலினை திருடிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியுள்ளது என்பதை அனைவரும் நன்கறிவீர்கள்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பால் முகவர்கள் சார்பிலும், நமது சங்கத்தின் சார்பிலும் காவல்துறையில் பல மாவட்டங்களில் புகார் அளிக்கப்பட்டதையும், "கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் திருடு போனால் நடவடிக்கை எடுக்க இயலாது" என காவல்துறை தரப்பில் கைவிரிக்கப்பட்டதையும் நாம் ஏற்கனவே கடந்த காலங்களில் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் பதிவு செய்திருக்கிறோம். எனவேதான் ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தி வீணாகிப் போவதையும், சேவை சார்ந்த தொழிலான பால் விநியோகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்கள் பாதிக்கப்படுவதையும் தடுக்க வேண்டும் என்கிற நல்லெண்ண அடிப்படையில் முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்க வேண்டும் என்கிற முயற்சியில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இந்நிலையில் வருகின்ற 24.02.2022 வியாழக்கிழமை அன்று முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் "வலிமை" திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த படம் வெளியாகும் திரையரங்க வளாகங்களில் வைக்கப்பட்டிருக்கும் அவரது கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ஒரு சில ரசிகர்களும், ரசிகர்கள் எனும் போர்வையில் உள்ள சமூக விரோதிகளும் நள்ளிரவிலோ அல்லது அதிகாலை நேரத்திலோ பால் முகவர்களின் கடைகளில் இருந்து பாலினை திருடலாம் என்கிற அச்சம் கலந்த சந்தேகம் ஏற்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் கண்ணயர்ந்து உறங்கும் நேரத்தில் சேவை சார்ந்த தொழிலான பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் பால் முகவர்களாகிய நாம் அனைவரும் நித்தமும் கண்விழித்து தங்குதடையற்ற சேவையை வழங்குவதாக பணி அமைந்திருப்பதால் இது போன்ற நேரங்களில் நாம் அனைவரும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே நாளை (24.02.2022) முதல் தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு தினந்தோறும் நள்ளிரவு தொடங்கி காலை 6.00 மணி வரை தமிழகம் முழுவதும் அந்தந்தப் பகுதியில் உள்ள பால் முகவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சுழற்சி முறையில் இரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நமது வாழ்வாதாரத்தை தற்காத்துக் கொள்ளுமாறு அன்போடு கேட்டு கொள்கிறோம். மேலும் ரசிகர்கள் எனும் பெயரில் "சமூக விரோதிகள்" எவரேனும் பாலினை திருட முயற்சி செய்தால் இரவு பாதுகாப்பு பணியில் இருக்கும் பால் முகவர்கள் அவர்களை பிடித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைப்பதோடு அதனை புகாராக பதிவு செய்து அதற்கான உரிய ரசீது (CSR COPY) பெற்று கொண்டு உடனடியாக நமது சங்கத்தின் தலைமைக்கு தகவல் கொடுக்க வேண்டுகிறோம்.” என்று பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.
