இன்றுடன் வெயிலின் தாக்கம் குறையும் என்றும், நாளை முதல் சில இடங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 4ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம், முடிவடைந்து 23 நாட்களுக்கு மேலாகிறது. ஆனாலும், இதுவரை இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக அனல் காற்று வீசுவதால், குடிசை வீடுகள் தானாகவே தீப்பற்றி எரிகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏசி இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏசி இல்லாத வீடுகளில், புழுக்கம் அதிகரித்து, மக்களுக்கு ஒருவித சோர்வு உண்டாகிறது.

அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குளம், குட்டை, ஆறுகள், ஏரிகள் உள்பட அனைத்து நீர் நிலைகளும் வறண்டு பாலைவனமாக மாறிவிட்டன. இதனால், நிலத்தடி நீர் இல்லாமல் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு தீவனமும் இல்லாமல் போய்விட்டது.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம், இன்றுடன் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மதுரை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் புதுவையில் இன்றுடன் வெயிலின் தாக்கம் குறையும் என்றும், நாளை முதல் 2 நாட்களுக்கு, மாநிலத்தின் சில இடங்களில், கனமழை பெய்யலாம் அறிவித்துள்ளது.