சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனல் காற்றுடன் வெயில் வீசுவதால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த 3 மாதத்துக்கு மேலாக, வெயில் சென்னை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வேளையில், நேற்று மதியம் முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான மழை பெய்து, மக்களை குளிர செய்துள்ளது.

இந்தாண்டு தொடங்கி 6 மாதம் முடியும் நிலையில், முதல் முறையாக நேற்று மழை பெய்தது. கத்தரி வெயில் முடிந்துவிட்டாலும், கடும் வெப்பமும், அனல் காற்றும் மக்களை சிரமங்களுக்கு ஆளாக்கிய நேரத்தில் பெய்த மழை, சற்று நிம்மதியை கொடுத்துள்ளது.

வெப்பம் குறையவும், தண்ணீர் தேவை பூர்த்தியாகவும் மழையை மலைபோல் நம்பியிருந்த சென்னைவாசிககளின் எதிர்பார்ப்பை, இந்த மழை தற்போது பூர்த்தி செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.