தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த வருடம் ஒரு நாளைக்கு முன்பாகவே பருவ மழை தொடங்கியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக வெயில் இல்லாமல் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது.

இந்த நிலையில் இன்று மழைக்கு வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். இன்று ஒரு நாள் மழை நின்று சுளீர் வெயில் அடிக்கும் என்றும் அதனால் கடந்த சிலநாட்களாக துவைத்த துணிகளை எல்லாம் இன்று காயவைத்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. 2017ம் ஆண்டிற்கு பிறகு சென்னையில் முழு நாளும் மழை பெய்த நாளாக அன்றைய தினம் அமைந்ததாக பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் மேற்கு உள்மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் இனி சிறப்பான மழை பெய்யும் நாளாகவே அமையும் என்றும் தமிழகம் சிறப்பான வடகிழக்கு மழையை வரும் நாட்களில் எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.