சென்னையில் ஆம்னி பேருந்தில் போறீங்களா? அப்படினா கண்டிப்பாக இதை நீங்க படிச்சே ஆகணும்..!
தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜனவரி 24ம் தேதி முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
மறுஉத்தரவு வரும் வரை கோயம்பேட்டை சுற்றியுள்ள ஆம்னி பேருந்து பணிமனையில் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளும் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஜனவரி 24ம் தேதி முதல் இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் மற்றும் ஆம்னி பேருந்து சங்கம் சார்பில் தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பாக விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஏற்கெனவே அறிவித்தபடி குறிப்பிட்ட இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல அனுமதிக்கப்படும், எனக்கூறி வழித்தடங்கள் குறித்து இரு வரைபடங்களைத் தாக்கல் செய்தார்.
அப்போது ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஆம்னி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை சென்னை மாநகருக்குள் உள்ள தங்களின் பணிமனைகளில் இருந்து ஏற்றி, இறக்கி அனுமதிக்க வேண்டும் என கோரினார். மேலும், எந்தெந்த வழிகளில் எல்லாம் தென்மாவட்டம் செல்லும் ஆம்னி பேருந்துகளை அனுமதிக்க வேண்டும் என்பதை தனது வாதத்தின் போது அவர் குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் போரூர், சூரப்பட்டு ஆகிய இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க எந்த ஆட்சேபமும் இல்லை. ஆனால் மனுதாரரின் கோரிக்கைகளை ஏற்றால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உருவாக்கியதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும். ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டுமென்பதற்காக அனைத்து புறநகர் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தற்போது ஆம்னி பேருந்துகளுக்காக முடிச்சூரில் 5 ஏக்கர் பரப்பில் அனைத்து வசதிகளுடனும் பராமரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மார்ச் மாதம் ஒப்படைக்கப்படும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மஞ்சளா ஆம்னி பேருந்துகள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். அங்குள்ள கேரேஜ்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், போரூர் மற்றும் சூரப்பேடு டோல் பிளாசா நிறுத்தங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்கவேண்டும். தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லாமல் இயக்கப்பட கூடாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால உத்தரவு தொடர வேண்டும் என்று நீதிபதி கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி மஞ்சுளா தனது தீர்ப்பில் கூறியிருந்தார்.
சென்னையில் ஆம்னி பேருந்தில் செல்வோர் கவனிக்க வேண்டிய மாற்றங்கள் விவரம்:
சென்னையில் கிளாம்பாக்கத்தை தவிர இனி சூரப்பட்டு, போரூர் சுங்கச்சாவடியிலும் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் ஏறவும் இறங்கவும் முடியும். கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளில் பயணிகள் இனி ஏறவும் முடியும். இறங்கவும் முடியும். ஆனால் வண்டலூர், பெருங்களத்தூர் போக முடியாது. ஏனெனில் சென்னையின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வாயிலில் உள்ள வெளிவட்ட சாலை வழியாக பேருந்துகள் நேரடியாக போரூர் சுங்கச்சாவடியை கடந்து கோயம்பேட்டிற்கு நேரடியாக இறங்கிவிடும்.