பொழுதுபோக்குப் பூங்காவில் 65 அடி உயரமுடைய ரங்க ராட்டினம் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம், குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள கனகரியா பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குஜராத் மாநிலம், அகமதாபாதில் உள்ள கனகரியா பகுதியில் பொழுதுப்போக்கு பூங்கா அமைந்துள்ளது. இங்கு விடுமுறை நாட்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் வந்து கண்டு களித்து செல்வார்கள். இதனால், இப்பூங்கா பரபரப்புடன் காணப்படும்.

மேலும், இங்குள்ள விளையாட்டு சாதனங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் விளையாடி மகிழ்வார்கள். குடும்பத்துடன் இங்கு வந்து செல்வதால், அவர்களுக்குள் புத்துணர்ச்சி ஏற்படும்.

இந்நிலையில், நேற்று மாலை பொழுதுப்போக்கு பூங்காவுக்கு ஏராளமான பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்தனர். அங்குள்ள  சுமார் 65அடி உயரமுள்ள ரங்க ராட்டினத்தில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ராட்டினத்தில் பெல்ட் அறுந்தது. அப்போது, அதில் விளையாடி கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்தனர்.

அதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். 28 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்ததும், அங்கு பணியில் இருந்த தீயணைப்பு மீட்பு படை மற்றும் போலீசார் உடனடியாக படுகாயமடைந்தவர்களை மீட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஹைட்ராலிக் கேபிள் மூலம் சுழன்ற அந்த ராட்டினத்தின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

65 அடி உயரத்துக்கு எழும்பி அங்கும் இங்கும் சுழலும் இந்த ராட்டினத்தில் 30க்கும் மேற்பட்டோர் அமர்ந்திருந்தனர். அப்போது முதல் சுற்றிலேயே ராட்டினம் சுழன்ற வேகத்தில் தரையில் மோதி நொறுங்கியது.இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.