நாட்டில் விவசாயிகளின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. பாஜ.வின் வாக்குறுதிக்கும், செயலுக்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது என மக்களவையில் திமுக எம்பி பழனி மாணிக்கம் குற்றம்சாட்டினார்.

மக்களவையில் கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்பி பழனிமாணிக்கம் பேசியதாவது:

நாட்டில் மற்ற தொழில்களைவிட, விவசாயம் பின்தங்கி விட்டது. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதாக கூறிய பாஜக, மீண்டும் அதே வாக்குறுதியை இப்போதும் கொடுத்துள்ளது. அவர்களின் வாக்குறுதிக்கும் செயலுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. அடுத்த தேர்தலிலும், அவர்கள் இதே வாக்குறுதியை கூறப் போகிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.

விவசாயிகளின் பயிர் கடனையாவது ரத்து செய்வார்கள் என எதிர்பார்த்தோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை. இந்த அரசு விவசாயிகளுக்கு வெறும் வேர்க்கடலையைத்தான் தருகிறது.

பிரதமரின் கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் வருடத்திற்கு ரூ.6,000 நிதியுதவி அளிப்பது மிகக்குறைவு. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க வேண்டுமானால், பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு மற்றும் மீன் உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இத்துறைகள் நல்ல வருவாயைத் தரக்கூடியவை என்றார்.

அதற்கு பதிலளித்த பாஜக எம்பி ராமாபதி ராம் திரிபாதி, ‘‘பட்ஜெட்டில் கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும்தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

வசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க இந்த ஆண்டு பட்ஜெட் நிச்சயம் உதவும். ரூ.6,000 நிதியுதவி சிறு தொகை அல்ல. அது சிறு விவசாயிகளுக்கு நெருக்கடியான சமயத்தில் உதவக்கூடியது. அவர்கள் இனி விதை, யூரியா வாங்கி கந்து வட்டிக்காரர்களிடம் கையேந்த வேண்டிய அவசியமில்லை என கூறினார்.