நிவர் புயல் கரையை கடந்த நிலையில் தெற்கு வங்க கடலில் நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் ஆண்டு தோறும் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தில் பல காற்றழுத்தங்கள் உருவாகி புயலாக மாறும். வங்கக்கடலில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 புயல்கள் வந்து சென்றுள்ளன. குறிப்பிட்ட சில புயல்கள் கடும் சேதங்களை ஏற்படுத்தி இன்று பேசப்படும் நிலையில் இருக்கின்றன.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரி-மரக்காணம் இடையே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை கரையை கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதுடன் மிகக் கனமழையும் பெய்தது. புயலின் தாக்கத்தால் இன்று காலை நிலவரப்படி மிக அதிக அளவாகத் தாம்பரத்தில் 31 செ.மீ., புதுச்சேரியில் 30 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. வடமேற்குத் திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலப் பகுதிக்குள் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், வங்கக்கடலில்  இருந்த நிவர் புயல் சென்று விட்டதால் இந்த ஆண்டுக்கான அடுத்த புயல் தற்போது உருவாகும் நிலை ஏற்பட்டது. இதுதொடரபாக வானிலை மையம் கூறுகையில்;- தெற்கு வங்க கடலில் நவம்பர் 29ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. காற்றழுத்த தாழ்வு வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்குநோக்கி நகர்ந்து தென்தமிழகம் நோக்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.