நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது என வானிலை ஆய்வு மைய தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தற்போது நிவர் புயல் கடலூரை நெருங்கி வருகிறது. நிவர் புயலானது சென்னையிலிருந்து 214 கி.மீ., புதுச்சேரியில் இருந்து 120 கி.மீ., கடலூரில் இருந்து 110 கி.மீ., தொலைவில் நிலை கொண்டுள்ளது. புயலின் மையப்பகுதி 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நிவர் புயல் கரையை கடந்த பிறகு அதன் தாக்கம் 6 மணி நேரம் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. பின்னர் படிப்படியாக வலுவிலக்கும்.

மேலும், சென்னையில் தற்போது 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் நாளை பெரும்பாலான இடங்களில் கனமழை முதல் அதீத கனமழை பெய்யக்கூடும். அதேபோல், காற்றின் வேகம் 75 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 55 கி.மீ., முதல் 60 கி.மீ., வரையிலும் சமயங்களில் 75 கி.மீ., வரையிலும் முற்பகல் முதல் பிற்பகல் வரை வீசக்கூடும் என தெரிவித்துள்ளார். 

நிவர் புயலின் வெளிச்சுற்று கரையை தொட்ட காரணத்தால் தான் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் கனமழை காரணமாக பயிர்கள், குடிசைகள் பாதிக்கப்படலாம். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். புயல் கடந்து செல்லும் பாதையில் இருக்கும் மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளார். புயல் கரையை கடக்கும் இடங்களில் 155 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இன்றிரவு 8 மணி முதல் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.