டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் தமிழக அரசு அவகாசம் கேட்டதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. 

டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் முதலில் நிபந்தனையின் பேரில் அனுமதி வழங்கியது.  பின்னர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை எனக் கோரி தொடரப்பட்ட மனுக்களை விசாரித்து, ஊரடங்கு முடியும் வரை தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டது.  ஆன்லைன் மூலம் மட்டும் மது விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள அதே வேளையில், ஆன்லைன் மூலமும் மது விற்பனை நடத்த அனுமதிக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த அனைத்து மனுக்களும் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என,  ஏற்கனவே டாஸ்மாக் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, புஷ்பா சத்திய நாராயணா அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு தெரிவித்திருந்த நிலையில், தற்போது டாஸ்மாக்  தொடர்பான வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் இருந்து மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தலைமை நீதிபதி ஏ.பி சாஹி தலைமையில் நீதிபதிகள் வினித் கோத்தாரி, நீதிபதி பி.என் பிரகாஷ் ஆகியோர் கொண்ட 3 பேர் அமர்வு முன்பு டாஸ்மாக் தொடர்பான வழக்கு விசாரணை வந்தது. அப்போது, தலைமை நீதிபதி மக்களின் உயிரை விட வருவாய் திரட்டுவது முக்கியமானதா தலைமை நீதிபதி காட்டாக கேள்வி எழுப்பினார். அமைதி, சட்டம்ஒழுங்கு சரியில்லாவிட்டால் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்காது. அரசியல் சாசன விதிகளை அமல்படுத்தும் கடமை நீதிமன்றங்களுக்கு உள்ளது தெரிவித்தார். இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.