ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை 2 மணி நேரம் திறக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தை பொறுத்தவரை ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான சேவைகள் மட்டுமே இயங்கின்றன. அத்தியாவசிய தேவையற்ற சேவைகள் முடக்கப்பட்டுள்ளன கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அரசே ஏற்று நடத்தும் அதன் முக்கிய வருவாய் காரணியான டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

இதனால், மது போதைக்கு அடிமையான ஏராளமானோர் மது கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். சிலர் போதை வஸ்திரத்தை கொடுத்து உயிரிழக்கின்றனர். இதனையடுத்து,  டாஸ்மாக் கடைகளை குறைந்தபட்சம் 2 மணி நேரம் மட்டும் திறந்து வைக்க வேண்டும் அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த வசந்த் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


அதில், திடீரென மது அருந்துவதை நிறுத்தும் போது கை நடுக்கம், உள்ளிட்ட உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.  மேலும் மது விற்பனை நிறுத்தப்பட்டதால் பல்வேறு டாஸ்மாக் கடைகளை உடைத்து மதுபாட்டில்களை கொள்ளையடிக்கின்றது என்று குறிப்பிட்டிருந்தார். எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகளை உத்தரவிட கோரிக்கை விடுத்தார். 


இந்த மனு நீதிபதிகள் சுப்பையா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அசாம் மற்றும் கேரளா மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அரசுத்தரப்பு வழக்கறிஞர், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதிக்க முடியாது என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்று நீதிபதிகள் டாஸ்மாக் கடைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.