தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 31-ம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டுள்ளது. 

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 3 மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், அந்த காலக்கெடுவிற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கூடுதல் அவகாசம் கேட்டது.

 

வாக்காளர் பட்டியலை முழுமையாக தயார் செய்யும் நடைமுறை முடிந்த பிறகே உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும் என்றும், மழை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த முடியாது என்றும் கூறி இருந்தது. தேர்தல் முடிந்த பின்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியது. முதற்கட்டமாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான வழிமுறை வெளியிடப்பட்டது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி நடைபெற்றது. 

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே ஆகஸ்ட் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், மீண்டும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் கேட்டுள்ளது. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் கூறப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் நடவடிக்கை குறித்து அரசியல் தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.