தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கோடை மழை தொடங்கி பரவலாக பலத்த மழை பெய்து வருவதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கோடை மழை தொடங்கியுள்ளதால் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதிகபட்சமாக 107 டிகிரி வரை வெயில் அதிகரித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் 11 உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசுவதால் காலை 11 மணி முதலே சாலைகளில் போக்குவரத்து மற்றும் மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. 

குறிப்பாக வேலூரில்  அதிகபட்சமாக 107 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் அந்த மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சேலம், தர்மபுரி, கரூர், மதுரை, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. நாமக்கல், கோவை, பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னை மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி அளவில் வெயில் நீடித்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை தொடங்கியுள்ளதால் அவ்வப்போது சில இடங்களில் மழை பெய்து வந்தது. 
குறிப்பாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் மலை பகுதிகளான நீலகிரி, உதகை, கொடைக்கானல், ஏற்காடு மற்றும் நெல்லை மாவட்டப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.சமவெளிப் பகுதிக்கு வெப்பம் தணிந்ததால் வால்பாறைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. நேற்று விருதுநகர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவானது. இதனால் கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘தென்கிழக்கு வங்கக்கடலில் மத்திய பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால், இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் சூறைக்காற்று கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.