தமிழ்நாட்டில் மாணவிகளை செருப்பால் அடித்த அரசு பள்ளி ஆசிரியைக்கு ரூ.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
Tamilnadu school Teachee Hit Students with slippers: ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய், தந்தையை அடுத்து மிகப்பெரும் பங்கு வகிப்பது ஆசிரியர்கள் தான். ஏனெனில் ஒரு குழந்தை சமுதாயத்தில் நல்ல மனிதனாக உருவெடுக்க ஆசிரியர்களே முக்கிய காரணம். அந்த வகையில் மாணவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெறுகினனர். இப்படிபட்ட ஆசிரியர்கள் இருக்க, ஒரு ஆசிரியை மாணவிகளை செருப்பால் அடித்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்ப்போம்.
மாணவிகளை செருப்பால் அடித்த ஆசிரியை
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் அரசு மகளிர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆசிரியையாக சாந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த 2017ம் ஆண்டு இந்த பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த 2 மாணவிகளை ஆசிரியை சாந்தி காலணியால் அடித்தார். மாணவிகள் மட்டும் பயன்படுத்தும் கழிவறையை ஆசிரியை சாந்தி திறந்து வைத்து பயன்படுத்தியதால் கதவை தாழிட்ட மாணவிகள் வெளியே காத்திருந்தனர். இதனால் கோபம் அடைந்த ஆசிரியை சாந்தி அந்த மாணவிகளை சரமாரியாக செருப்பால் அடித்துள்ளார்.
மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை
மேலும் அந்த மாணவிகளுக்கு வகுப்பறைக்கு வெளியே தரையில் அமர வைத்து பாடம் நடத்தியதுடன், வருகை பதிவேடுக்கு 100 ரூபாயும், தேர்ச்சி மதிப்பெண் வழங்க 150 ரூபாயும் வசூலித்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவிகளின் பெற்றோர் சார்பில் பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் மாவட்ட கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மாணவியின் தந்தை தந்தை ஆறுமுகம் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் கொடுத்தார்.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவு
இது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், அவரும் விசாரணை நடத்தி ஆசிரியை சாந்தி தவறு செய்ததை அறிக்கையாக தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் வி. கண்ணதாசன், ''ஆசிரியை சாந்தி மாணவிகளை காலணியால் அடித்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இது மன்னிக்க முடியாத பெரும் குற்றம். ஆகவே பாதிக்கப்பட்ட மாணவிகள் இருவருக்கும் தமிழ்நாடு அரசு ஒரு மாதத்தில் தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டு தொகையை ஆசிரியை சாந்தியிடம் இருந்து வசூலிக்க வேண்டும். ஆசிரியை சாந்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
