தமிழகத்தில், 12 மாவட்டங்களில், இன்றும், நாளையும், கொளுத்தும் வெயில் மட்டுமின்றி அனல் காற்று வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும், தமிழகத்தில் கடும் வெயில் ஆட்டி படைக்கிறது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே தலை காட்ட முடியாமலும், இரவில் வீட்டில் தூங்க முடியாமல் மொட்டை மாடியிலும் தஞ்சமடைகின்றனர். 

இதுபோதாத குறைக்கு, தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதால் ஆறு, குளம், குட்டை உள்பட அனைத்து நீர் நிலைகளும் வற்றி, வறண்ட பாலைவனமாக மாறிவிட்டன. இதையொட்டி குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இந்நிலையில், இன்றும் நாளையும் வெயில் தாக்கத்தால் அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது. 

தென்மேற்கு பருவ மழை, துவங்கிய, சில நாட்களிலேயே நின்று விட்டது. அதனால், மாநிலம் முழுவதும் அனல் காற்று வீசுகிறது. இன்றும், நாளையும், 12 மாவட்டங்களில், அனல் காற்று வீசும். திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலுார், கரூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அனல் காற்று வீசும். 

மதுரை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில், 2 நாட்களுக்கு, 4 டிகிரி செல்சியஸ் கூடுதலாக வெப்பநிலை பதிவாகும். அதேபோல், ஈரோடு, கோவை, நீலகிரி, சேலம், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், சில இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என கூறினர்.