சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்து ஏற்பட்ட குறைபாட்டை விளக்க, ‘இந்திக் கற்றுக்கொள்ளாமல் ஏன் இருக்கிறீர்கள்’ என்று அந்நிறுவனம் கேட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அளவில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் சோமேட்டோவும் ஒன்று. சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்த தமிழர் ஒருவரிடம், ‘இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்’ என்று அந்நிறுவனத்தின் கஸ்டமர் கேர் கேட்டது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த விகாஷ் என்பவர் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
அதில், “சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். ஆனால், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லை. இதுகுறித்து சோமேட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்பு கொண்டேன். ஆனால், அந்தப் பணம் திரும்பவும் கிடைக்காது. ஏனென்றால், உங்களால் ஹிந்தியில் பிரச்னையை விளக்க முடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியது’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் கஸ்டமர்கேருடன் நடந்த சாட்டிங்கையும் ஸ்கீரின் ஷாட் செய்து இணைத்துள்ளார். அதனையடுத்து, #regectzomato என்ற ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. சோமேட்டோவுக்கு எதிராக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகிறார்கள்.

