உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ், சமூகத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் திறந்துள்ளன. 

மிகவும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சிலர் வேண்டுமென்றே காரணமே இல்லாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். தனிமைப்படுதல் மற்றும் சமூக விலகல் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தினாலும் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதிலிருந்தே பலர் வெளியே திரிந்தனர். சில போலீஸார் வேண்டுகோள் விடுத்து அனுப்பினர். சில போலீஸார் அடித்துவிரட்டினர். சிலர் தோப்புக்கரணம் போன்ற தண்டனைகளை கொடுத்து அனுப்பினர். 

ஆனாலும் பொய்க்காரணங்களை கூறி பொதுவெளியில் மக்கள் சுற்றுவதை பார்க்கமுடிகிறது. இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி பொதுவெளியில் சுற்றிய 1100 பேர் மீது தமிழக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் 5 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை, திருவாரூர், கடலூர் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 1100 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்த 5 பேர் வெளியே சுற்றிய நிலையில், அவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மீது 144 தடை உத்தரவை மீறியது, நோய்த்தொற்றை பரப்புதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸார் கெஞ்சும் நிலையிலிருந்து அதிரடி நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டனர். எனவே மக்கள் ஊரடங்கை மதித்து வீட்டில் இருக்க வேண்டும்.