கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில், மே 3ம் தேதிக்கு பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வு குறித்து விவாதிக்க இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. 

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அறிக்கை வெளியாகியுள்ளது. அதன்படி நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்தவிதமான தளர்வுமின்றி முழு ஊரடங்கு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில்(நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத) கீழ்க்கண்ட பணிகளுக்கு அனுமதிக்கப்படுகிறது.

1. கட்டுமான தொழிலாளர்கள் பணி நடக்கும் இடத்திலேயே தங்கியிருக்கும் பட்சத்தில், அதுமாதிரியான கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.

2. அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை கட்டுமான பணிகள் நடைபெறலாம்.

3. சிறப்பு பொருளாதார மண்டலங்கள், ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கலாம். ஆனால் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் தான் ஊழியர்கள் பணிக்கு சென்றுவர வேண்டும்.

4. ஐடி நிறுவனங்கள் 10% அல்லது 20 ஊழியர்களுடன் இயங்கலாம். ஊழியர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனத்தில் தான் சென்றுவர வேண்டும்.

5. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

6. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் மின் வணிக நிறுவனங்கள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் செயல்படலாம். 

7. உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம். 

8. வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், மொபை போன் கடைகள், மின் மோட்டார் மற்றும் கண்ணாடி விற்பனை மற்றும் பழுதுநீக்கும் கடைகள், எலெக்ட்ரிகல் பொருட்கள் விற்கும் கடைகள் ஆகியவை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 

9. பிளம்பர், ஏசி மெக்கானிக், தச்சர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது சென்னை மாநகராட்சி ஆணையரிடமோ அனுமதி பெற்று பணியாற்றலாம்.