கொரோனா வைரஸ் தமிழகத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,757 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா உறுதியான 231 பேரில், 174 பேர் சென்னையில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

மொத்தம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,257 ஆக  உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டுள்ள மண்டலங்களான திருவிக நகர், ராயபுரம், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை அங்கு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் ஒரு சில பணிகள் மீண்டும் இயக்க தமிழக அரசு தளர்வு கொண்டுவந்தது. அதன் படி வெளிமாநிலத்தில் இருந்து வந்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருபவர்கள், அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை கட்டுமான பணிகள், சமூக விலகலை கடைபிடித்து மீண்டும் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டது. 

ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் 25% ஊழியர்களுடன் இயங்கலாம். ஆனால் நிறுவனம் ஏற்பாடு செய்யும் வாகனங்களில் தான் ஊழியர்கள் பணிக்கு சென்றுவர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் ஐடி நிறுவனங்கள் 20 ஊழியர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள்,எலக்ட்ரிகல் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் என்றும்,  உணவகங்கள் 
காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் மட்டும் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

அதே போல், பிளம்பர், ஏசி மெக்கானிக், தச்சர், எலெக்ட்ரீசியன் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடமோ அல்லது சென்னை மாநகராட்சி ஆணையரிடமோ அனுமதி பெற்று பணியாற்றலாம் என கூறப்பட்டது. 
 
இந்நிலையில், இப்படி வேலை செய்பவர்களுக்கான விதிமுறையையும், மீண்டும் இயங்கும் நிறுவனங்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளையும் பின் பற்ற வேண்டும் என்று தமிழக அரசு சார்பில், தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதில் கூறியுள்ளதாவது, அவசியமாக சமூக விலகலை கடைபிடிப்பது மட்டும் இன்றி,  நாள்தோறும் இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு தங்கள் வேலை செய்யும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

குறிப்பாக கழிப்பறைகளை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சுத்தம் செய்ய வேண்டும், அதே போல்  200  தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் தொழில் நிறுவனங்களில் மருத்துவர்கள் இருக்க வேண்டும் என தற்போது வெளியிடப்பட்டுள்ள தமிழ அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.