தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் 9ம் தேதி கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, தற்போது ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நவம்பர்16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். 

பின்னர் தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில்: ஆசிரியர்கள் மூலமாக நேரடியாக வகுப்பறையில் கற்பதன் மூலமாக மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்துக்கொண்டு கற்பதற்கும், தேர்வினை எதிர்கொள்வதற்கும் ஏதுவாக நவம்பர் 16 முதல் 9 முதல் 12ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக சில கருத்துகள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால், பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட ஏதுவாக நவம்பர் 9ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள்,  அந்தந்த பள்ளிகளில் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.