ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மற்றும் சிறப்பு தொழுகைகளில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால், வழக்கமான நடைமுறையை இஸ்லாமியர்கள் பின்பற்ற முடியாது.

எனவே இதுகுறித்த மாற்று நடவடிக்கை குறித்து இஸ்லாமிய அமைப்புகளுடன் தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, சமூக இடைவெளியை பின்பற்றி முன் ஏற்பாடுகளுடன் பள்ளிவாசல்களிலேயே நோன்புக்கஞ்சி காய்ச்ச இஸ்லாமிய அமைப்பினர் அனுமதி கேட்டனர். ஆனால் அது பாதுகாப்பானது இல்லையென்பதால், கொரோனாவின் தீவிரம் கருதி அதற்கு அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளிவாசல்களில் நோன்புக்கஞ்சி காய்ச்சி தன்னார்வலர்கள் மூலம் வீடுகளுக்கு வழங்க இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால் அப்படி செய்தால், அதன்மூலமும் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதால் அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளி வாசல்களுக்கு வழங்கப்பட வேண்டிய 5450 மெட்ரிக் டன் அரிசியை 19ம் தேதிக்குள் தமிழக அரசு  வழங்கும் என்றும், அந்த அரிசியை பள்ளிவாசல்கள் மூலமாக டோக்கன் முறையில் வீடுகளுக்கு விநியோகித்து, வீடுகளிலேயே கஞ்சி தயாரித்துக்கொள்ளுமாறும் அரசு தெரிவித்துவிட்டது. அதற்கு இஸ்லாமிய அமைப்பினரும் ஒப்புக்கொண்டதாக, ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.