தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், சென்னையில் அதிகபட்சமாக 1458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்து ஊருக்கு சென்றவர்களின் மூலம் மற்ற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்துவருகிறது. 

சென்னையில் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாற்றியவர், தன்னார்வலர் மூலம் பரவுதல், அம்மா உணவகத்தில் பணியாற்றியவர் என பல தரப்பிலும் பாதிப்பு உறுதியாகிவருவதால் அத்தியாவசிய சேவைகளுக்கே அபாயம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணியாற்றிய 2 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. பால் அத்தியாவசியமான உணவு பொருள் என்பதால், மிகவும் பாதுகாப்பான முறையில் ஆரோக்கியமானவர்களை மட்டுமே பணியில் ஈடுபட செய்ய முடியும். மாதவரம் பால் பண்ணையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் நிறைய பேர் வேலைக்கு செல்ல முடியாத சூழலால் உற்பத்தி குறைந்துள்ளது. 

எனவே சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. அதைப்போக்கி, மக்களூக்கு ஆவின் பால் எந்தவித தடையுமின்றி கிடைக்க, சேலம், விழுப்புரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு ஆவின் பாலை கொண்டுவந்து விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் மற்ற மாவட்டங்களிலும் தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவின் பால் நிறுவன ஊழியர்கள் பாதுகாப்பான முறையில் பாலை ஏற்றுமதி செய்துவருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கமளித்துள்ளார்.