தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15-ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 16,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், நாளுக்கு நாள் தமிழகத்தில் 
பாதிப்பு அதிகரித்து வருகிறது._

 

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்;-  தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்திருப்பதாக நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதிதாக மேலும் 3 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் இருந்து சென்னை வந்த இருவருக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய 74 வயதான ஆண் மற்றும், 52 வயதான பெண் இருவருக்குமே கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த 25 வயது பெண் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புதிதாக பாதிக்கப்பட்ட மூன்று பேரும், புரசைவாக்கம், போரூர், கீழ்க்கட்டளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.