இந்தியாவில் 7600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளநிலையில், மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக தமிழகம் கொரோனா பாதிப்பில் இரண்டாமிடத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் 1600க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இன்று மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 969ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வருவதை எப்போது தெரிந்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறித்த அப்டேட் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய தலைமை செயலாளர் சண்முகம், தமிழ்நாட்டில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தினார்.

ரேபிட் டெஸ்ட் கிட் இன்னும் இந்தியாவிற்குள்ளேயே வரவில்லை. அதனால் நமக்கு இன்னும் கிடைக்கவில்லை. ஆனால், பிசிஆர் டெஸ்ட்டின் மூலம் தெளிவான முடிவை பெறமுடியும். ரேபிட் டெஸ்ட் கிட்டின் மூலம் அரைமணி நேரத்திற்குள்ளாக முடிவை பெறலாம் என்பதால், அதிகமானோரை டெஸ்ட் செய்ய வேண்டிய தேவையேற்படும்போது ரேபிட் டெஸ்ட் கிட் நமக்கு கிடைத்தால் போதுமானது. 

கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்துவருவதாக தெரிவித்த தலைமை செயலாளரிடம், எப்போது பாதிப்பு எண்ணிக்கை கட்டுக்குள் வரும் என்ற கேள்விக்கு, இன்னும் 3 நாட்கள் பொறுத்திருங்கள். அதுகுறித்த தெளிவு கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்திடம் அனுமதி கோரியுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்த வசதியில்லாதவர்களுக்கு இலவசமாக பரிசோதனை செய்தால் நிறைய பேருக்கு  செய்ய முடியும் என்பதால், அதுகுறித்தும் ஆலோசித்துவருவதாகவும் தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.