Asianet News TamilAsianet News Tamil

ஒரே ஒரு குறை மட்டும்தான்.. ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள்.. திமுகவை வெளுத்து வாங்கிய அண்ணாமலை..!

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் அடுக்கடுக்கான பொய்கள் கூறப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tamil nadu bjp president annamalai condemns about dmk govt-rag
Author
First Published Feb 12, 2024, 8:00 PM IST

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்தபின், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாக கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. 

ஆளுநர் உரையை புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு உள்ளது.   2018ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் - நான் தொடக்கத்திலே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது. 

2019ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் - ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல். எனவே, அரசு எழுதி தந்திருக்க கூடிய Failure பேப்பர்களை கவர்னர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். எனவே, நாங்கள் அதை கண்டித்து, அவரது உரையை புறக்கணித்து, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம். 

2020ஆம் ஆண்டு திரு முக ஸ்டாலின் - ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து, அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம். 2021ஆம் ஆண்டும் ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தீர்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர். இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும் விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஒரு உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண். 

பொய் 1: நாட்டிலே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது, அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு. 

உண்மை நிலவரம்: திமுக ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தில் தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதை பலமுறை தமிழக பாஜக முன்வைத்தும் அதற்கு எந்த தீர்வும் காணாமல், வசூலில் மட்டுமே குறியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. 

சமீபத்தில் நாங்கள் முன்வைத்த SGST refund குற்றச்சாட்டாக இருக்கட்டும், மின்சார கட்டணம் மற்றும் Demand Chargeஐ உயர்த்தியதாக இருக்கட்டும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பும் நிலையாக இருக்கட்டும், திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் நடவடிக்கைகளால் முதலீடுகள் குறைந்து கொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒரு காலணிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அந்தபின் அந்த தொழிற்சாலை பணிகள் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை. இவ்வாறே உள்ளது தமிழக அரசின் செயல்பாடு. 

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டுவந்துள்ளதாக பெருமைப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் முன்னணி மாநிலங்கள் இது போன்ற மூதலீட்டாளர் மாநாடுகளில் கொண்டு வந்த முதலீடுகள் எவ்வளவு என்பதாவது திமுகவுக்கு தெரியுமா ? உத்தரபிரதேசம் - 33 லட்சம் கோடி ரூபாய், குஜராத் - 26 லட்சம் கோடி ரூபாய், கர்நாடகம் - 10 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவ்வாறு இருக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை திமுக உணரவேண்டும்.  
 
பொய் 2: சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. இயற்கை பேரிடர்களை திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது பாராட்டுக்கள்.  

உண்மை நிலவரம்: சிங்கார சென்னையை sink ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. நேர்மையான ஆட்சியாளராக இருந்திருந்தால், சொன்ன பொய்களுக்கும் செய்த தவறுகளுக்கும் திமுக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும்.  கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே, 95% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாகக் கூறியிருந்தனர். பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால், மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர் பாபு.

அதன் பின் 99 சதவீத பணிகள் நிறைவுபெற்றதாக கூறிய செய்திகளும் உள்ளன. மழைக்கு முன்பு, 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் திரு. கே.என். நேரு, சென்னை வெள்ளக்காடாக மாறியபின், 42 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் மட்டுமே நிறைவுபெற்றதாக கூறினார். 99 சதவீத பணிகள் நிறைவடைந்தது என்று சொன்ன நீங்கள் கடைசியில் மிக்ஜாம் புயலின்போது மக்களை தத்தளிக்கவிட்டது தான் மிச்சம்.  இது போதாது என்று, தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்து கொண்டிருந்தபோது இந்தி கூட்டணி கூட்டத்திற்கு புதுதில்லி சென்றவர் தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். இது தான் பேரிடரை திறம்பட கையாண்ட விதமா ? இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் திமுகவினருக்கே உரித்தான குணம்.      

பொய் 3: சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

உண்மை: 2017-18ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை நமது மத்திய அரசு அறிமுகப்படுத்திய போது, மாநிலங்களின் வரிவருவாய் அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும் போது 14 விழுக்காடு வளர்ச்சி காணவில்லையெனில் அந்த பற்றாக்குறையான வரிவருவாயை இழப்பீடு தொகையாக மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வழங்கும் என்று தெரிவித்திருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம் பின்வருமாறு, 2013-14: 3%, 2014-15: 7%, 2015-16: 2%, 2016-17: 7% ஆகும்.

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி சதவீதம் பின்வருமாறு, 2018-19: 14%, 2019-20: 10%, 2020-21: -12% (கொரோனா காலகட்டம்), 2021-22: 16%, 2022-23: 24% ஆகும். 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாகக் கொடுத்தது மட்டுமல்லாது கார் நிதிப்பற்றாக்குறையை சமாளிக்க 14,336 கோடி ரூபாய் கடன் உதவியும் வழங்கியது நமது மத்திய அரசு. சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதை திமுக அரசு தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும், இல்லையெனில் ஆளுநர் உரையில் இது போன்ற பொய்களைச் சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

பொய் 4: சட்ட ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை அளிக்கிறது.

உண்மை: சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தாங்கள் தங்கியிருக்கும் மாளிகையில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் கேட்டால் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு உண்மை நிலை புரியும். கோவை தற்கொலைப்படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீது எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது. ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியதை தவிர என்ன சாதனை செய்தது திமுக. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தின் போது அமைச்சர் உட்பட அனைவரும் திரைக்கு பின்னால் மறைந்துகொண்டு வேடிக்கை மட்டும்தானே பார்த்தீர்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தமிழகத்தின் விளையாட்டு அமைச்சர் திரு உதயநிதி பேசிய பின்பும் மத நல்லிணக்கத்தை பற்றி பேச திமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது ?

ஒருமுறை சார்ஜ் செய்தால் 190 கிமீ தூரம் பயணிக்கலாம்.. புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க அருமையான வாய்ப்பு..

பொய் 5: மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம்.

உண்மை: அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி வழங்கி விட்டு, சுமார் 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மக்களுக்கு உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியதில் என்ன பெருமை உள்ளது ? இப்படி கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கட்சி மேடைகளில் மட்டும் 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின், அதை ஆளுநர் உரையில் சேர்க்காமல் விட்டது உள்ளபடியே மகிழ்ச்சி.

பொய் 6: புதுமைப் பெண் திட்டம் மூலமாக 2.73 லட்சம் பெண்கள் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை: தமிழகத்தில், இதற்கு முந்தைய ஆட்சியின் போது நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது அனைவரும் அறிந்ததே. முந்தைய திட்டத்தை நிறுத்திவிட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்ன காரணம் என்று 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, புதுமை பெண் திட்டம் மூலமாக 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலின்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவிகளின் எண்ணிக்கை, 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 என்று சமீபத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 2 வாரங்களுக்குப் பிறகு அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இப்படி உண்மைக்கு புறம்பான தகவலை ஆளுநர் உரையில் கொடுத்தது தவறு. அது ஒரு புறம் இருக்க, முந்தைய திட்டத்தை கைவிட தமிழக முதல்வர் சொன்ன உத்தேச பயனாளிகளில் சரிபாதியை கூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்?

பொய் 7: முதல்வரின் காலை உணவு திட்டம், நாட்டின் முதன்மை மாநிலம்

உண்மை: பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்ல, காலை உணவும் போஷன் திட்டமும் வழங்கப்பட வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு, மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை, போஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதி 1,146 கோடி ரூபாய்.

இந்தியாவில் பல மாநில அரசுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்கள் என்பதை தமிழக முதல்வர் புரிந்து கொள்ளவேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவச அரிசியும், ஒரு வேளை உணவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுவது அந்த தொண்டு நிறுவனங்களின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ளதை அறிய முடிகிறது.

பொய் 8: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம் - 2024 எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின் போது அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

உண்மை: கடந்த ஆண்டு, பட்டியல் சமுதாய மக்களுக்கு நமது மத்திய அரசு வழங்கிய சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் வீணாக்கியதை தமிழக பாரதிய ஜனதா கட்சி கண்டித்தது. அதன் பின்னர், பட்டியல் சமுதாய மக்களுக்கு SCSP மூலமாக வரும் நிதியை சரியாக செலவிட ஒரு சட்டமுன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்டது என்று திமுக அரசு சொல்லி சுமார் ஒரு ஆண்டு கடந்துவிட்டது. இனியும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுக தற்போது தெரிவித்துள்ள செயல் திட்டம் தடையின்றி செயல்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

பொய் 9: சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம்

உண்மை: கடந்த ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆட்சிமாற்றத்திற்குப் பிறகு, எங்களுக்கு 6 மாத கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று குலசேகரன் கமிஷன் விடுத்த கோரிக்கையை திமுக அரசு நிராகரித்தது. இவ்வாறு இருக்கையில் மத்திய அரசிடம் இது தொடர்பாக எதற்கு வலியுறுத்துகிறீர்கள் என்று எங்கள் கேள்வி.

பொய் 10: தமிழக அரசின் இந்த காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம்

உண்மை: விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவர்கள், சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று நமது மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு திமுக அரசு சூட்டிய பெயர் இன்று காப்போம். மேலும், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன்கள் வழங்கும் திமுக ஆளுநர் உரையில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது.

விவசாயிகளின் நலன் காக்க பல முன்னோடி திட்டங்களை இந்த அரசு நடைமுறைபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டபோது, திருவண்ணாமலை விவசாயிகள் மீது குண்டாஸ் வழக்கு, தமிழக அரசின் முயற்சியால் 2023ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 243 மீனவர்களில் 242 மீனவர்கள் விடுவிக்கப்பட்டதாக சொன்னபோது, மத்தியில் காங்கிரஸ் திமுக காலத்தில் 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதும் தான் நினைவுக்கு வந்தது. திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில் ஒரே ஒரு குறை தான், கிளம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சாதனை இந்த ஆளுநர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. அந்த இடம் பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம்.

குறைந்த விலையில் சிம்லா, குலு மணாலி செல்ல அருமையான டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios