சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.  

சென்னை புறநகர் பகுதிகளான பெருங்களத்தூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்,  தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தில் திமுக எம்.எல்.ஏ. எஸ்.ஆர் ராஜா கிழக்கு-மேற்கு தாம்பரத்தை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க கோரி வலியுறுத்தியதோடு, மேம்பாலங்கள் கட்டுவதற்கான பணிகளில் தாமதம் ஏற்படுவது ஏன் என்ற கேள்வியும் முன்வைத்தார். 

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையை அடுத்த பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை தற்போதிருக்கும் 4 வழிச்சாலை 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

 

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பெருங்களத்துரில் பல்லடுக்கு பாலம் அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார். சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவைப்படும் இடங்களில் பல்லடுக்கு மேம்பாலம் கட்டப்படும். தற்போது சென்னையில் 9 மேம்பாலங்கள் கட்டும் பணி நடைபெறுகிறது. விரைவில் பணிகள் நிறைவடையும். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடம் டிசம்பர் மாதத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.