மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளுக்கு சன் குழும தலைவர் கலாநிதி மாறன் ரூ. 5 கோடி நிதியுதவியை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார்.
மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர்செய்திடவும், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவதற்கான வங்கி விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழகத்தில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டெடுப்பதற்கு தங்களின் பங்களிப்பாக தமிழக முதல்வரும், அமைச்சர்களும், திமுகவின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், தங்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடவுள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில், நல்லுள்ளம் கொண்ட பல்வேறு தொழில் நிறுவனங்களும், தன்னார்வ அமைப்புகளும், பொது மக்களும் இந்த மாபெரும் பணிக்கு தங்களது பங்களிப்பினையும் வழங்கிட விருப்பம் தெரிவித்து, அரசைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைத்திடவும், புதிய வாழ்வாதாரங்களை மீள உருவாக்கிடவும் தொழில் நிறுவனங்களைச் சார்ந்தவர்களும், தன்னார்வலர்களும், பொதுமக்களும் முதலமைச்சர் பொது நிவாரண நிதி வாயிலாக, மிக்ஜாம் மீட்புப் பணிகளுக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கிட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னதாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்த நிலையில் சன் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கலாநிதிமாறன், முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
