மருத்துவக் கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மாதம் ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவக் கழிவுகளை சரியாக கையாளாத மாநிலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுநல வழக்கு டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவ்வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘‘மருத்துவ கழிவுகள் தொடர்பான முழுமையான விவரங்களை இன்னும் 2 மாதத்தில் அனைத்து மாநிலங்களும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தை மிகவும் கண்டிப்புடன் தாங்கள் அணுக போகிறோம். மருத்துவக் கழிவுகளை கையாள்வது தொடர்பாக தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஏற்கனவே வழங்கிய உத்தரவுகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தவறும் மாநிலங்கள் மாதம் ஒரு கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியது வரும்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.