10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. 

இன்று வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 95.2 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
மாணவிகள் 97 சதவீதமும், மாணவர்கள் 93.3 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.1 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 2018-ம் ஆண்டு 94.50 சதவீதமாக இருந்த பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 95.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் முதலிடம் 

மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் 98.53 சதவீதத்துடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்திலும், 98.48 சதவீதத்துடன் ராமநாதபுரம் 2-வது இடத்திலும், நாமக்கல் 3-வது இடத்தையும் பிடித்தது. 89.98 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளது.