சென்னை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாடியில் இருந்து குதித்து மாணவன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொத்தேரியில் அமைந்துள்ளது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம். இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் நடத்தி வரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து மாணவர்கள் படிக்கிறார்கள். பெற்றோர்களின் நேரடிக் கண்காணிப்பில் மாணவர்கள் இல்லாததாலும், கல்லூரி நிர்வாகம் அவர்களைக் கண்டு கொள்ளாததாலும் அங்கு தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு அளவிற்கு மிஞ்சிய சுதந்திரம் கிடைக்கிறது. 

இதனால் இந்தக் கல்லூரி மாணவர்கள் எளிதாகத் தவறான பழக்கங்களில் சிக்கிக் கொள்கிறார்கள் என்ற சர்ச்சை நீண்ட காலமாக இருந்து வருகிறது. ஆண்டு தோறும் இந்தப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த அடுத்தடுத்த தற்கொலைகள் மாணவர்களை பீதியடையச் செய்தது. 

இந்நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த ராகவன், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐ.டி.பிரிவில் இறுதி ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாடியில் இருந்து குதித்து மாணவன் ராகவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஒரு மாதத்தில் மட்டும் மாணவ, மாணவியரின் தற்கொலை 3-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.