2ம் வகுப்பு புதிய பாடத்திட்ட புத்தகத்தில் அச்சடிக்கப்பட்ட தேசிய கீதத்தில் பிழை ஏற்பட்டுள்ளது. இதனை திருத்தம் செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த 13 ஆண்டுகளுக்கு பின், தமிழக அரசின், பள்ளிக்கல்வி பாடத் திட்டம், மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. புத்தகங்களும், பாடங்களும் புதிய வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், புத்தகத்தை தயார் செய்யும் நேரத்தில் சில அதிகாரிகள், பேராசிரியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனால், பாடப்புத்தகத்தில் உள்ள சில அம்சங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக, 2ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள தேசிய கீதம் பாடல் வரிகள், தவறாக அச்சிடப்பட்டுள்ளது. 2ம் வகுப்புக்கான, முதல் பருவ கணக்கு மற்றும் சூழலியல் பாடப் புத்தகத்தில், தேசிய கீதமும், தமிழில் அதன் பொருளும் அச்சிடப்பட்டுள்ளது. இதில், 10வது வரி இடம் மாறி அச்சிடப்பட்டதுடன், பிழையும் ஏற்பட்டுள்ளது. இதை கண்ட ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து, பிழை செய்யப்பட்டுள்ள பாடப்புத்தகத்தில், திருத்தி சீரமைக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மாணவர்களின் கல்வித்தரம் உயரவேண்டும் என பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால், ஆரம்ப காலத்திலேயே பாடத்திட்டங்களில் குளறுபடிகளும், பிழையும் ஏற்பட்டால், தங்களது பிள்ளைகளின் எதிர்க்காலம் என்னவாகும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.