தமிழகத்தில் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி, பல்வேறு கோயில்களில் சிறப்பு யாகம், பூஜைகள் நடத்தப்படுகின்றன. இதையொட்டி, பஞ்சவடீ ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் நாளை காலை மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் -- புதுச்சேரி வழியில் அமைந்துள்ள விஸ்வரூப ஜெயமங்கள பஞ்சமுக ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் நாளை காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

பஞ்சவடீ திருத்தலம், சித்தர்கள் முனிவர்கள், ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியாக உள்ளது. தமிழகத்திலேயே எங்கும் இல்லாத பஞ்சமுகத்தில், மேற்கே ஆஞ்சநேயர், கிழக்கே கருடன், தெற்கே வராகர், வடக்கே நரசிம்மர், மேலே ஹயக்கிரீவர் என 5 முகம், 10 கரங்களுடன், அதில், 10 வித ஆயுதங்களுடன் 36 அடி உயரத்தில் விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை, விநாயகர் சிலை, பட்டாபிஷேக ராமர் சிலை ஆகியவை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இங்குள்ள ஆஞ்சநேயர் சிலை, மகாபலிபுரம் அருகே கேளம்பாக்கத்தை சேர்ந்த பிரபல சிற்பி முத்தையா, கடந்த 2003ம் ஆண்டு வடிவமைத்து, 2003 ஜூன் 12ம் தேதி பஞ்சவடீயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையடுத்து 2007ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் ஆஞ்சநேயர் சிலையின் அடிப்பாகத்தில் பஞ்சமுக ஆஞ்ஜநேயர் மூலமந்திரத்தை 36 லட்சம் தடவை ஜபம் செய்து, 3,60,000 தடவை ஹோமம் செய்து, உரு ஏற்றப்பட்ட அரை கிலோ சுத்த தங்கத்தாலான எந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுபோல், வேறு எந்த கோயிலிலும் செய்யவில்லை என்பதே இக்கோயிலின் சிறப்பம்சமாகும். 

மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் உள்பட பஞ்சலோகத்தால் ஆன 5 அடி மற்றும் 3 அடி உயரத்தில் உற்சவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையும் வைதது, ஆகம விதிப்படி பூஜைகள் செய்யப்படுகின்றன.

மூலவரின் மேல் உள்ள விமானம் 198 அடி உயரத்தில் ஒரு கலசத்துடன் அமைந்துள்ளது. ஆஞ்சநேயருக்கு எதிரில் உள்ள ராஜகோபுரம் 3 நிலை 5 கலசங்களுடன் உள்ளது. இங்குள்ள சந்தன மரத்தால் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்ட ராமரின் பாதுகைகள் மிகவும் விஷேசமானது. காரணம், இந்த பாதுகை 108 திவ்ய தேசத்தில் 106 திவ்ய தேசங்களில் பூஜை செய்யப்பட்டு உரு ஏற்றப்பட்டது என கூறிகின்றனர்.