Asianet News TamilAsianet News Tamil

சென்னை வெள்ளத்தில் தந்தையைத் தேடிப் போன மகன் 3 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

போலீசார் நடத்திய விசாரணையின்போது, சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போன அருண் என்று தெரியவந்தது. அருணின் குடும்பத்தினரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Son went in search of his father in the Chennai floods dies, body found after 3 days sgb
Author
First Published Dec 7, 2023, 8:29 PM IST

சென்னையில் தனது தந்தையைத் தேடிச் சென்ற பள்ளிக்கரணையைச் சேர்ந்த இளைஞர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 3 நாட்களுக்குப் பின் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை காமகோடி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் - ரேவதி தம்பதியின் மகன் அருண் (28). மகள் அம்பிகா. மிக்ஜம் புயலால் பெய்த கனமழையில் இவர்கள் வசித்த பகுதி வெள்ளத்தில் தத்தளித்தது. வீடுகளில் மழைநீர் புகுந்துவிட்டதால், அங்கிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களைத் தேடி தஞ்சம் அடைந்தனர்.

முருகனின் குடும்பமும் வீட்டைக் காலிசெய்துவிட்டு, பாதுகாப்பான இடத்தைத் தேடிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு முகாமில் இருந்தபோது முருகன் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். சென்றவர் நீண்ட நேரமாக முகாமுக்குத் திரும்பாததால், மகன் அருண் தந்தையைத் தேடி வீட்டுக்குச் சென்றுள்ளார். மகனும் போனவர் மீண்டும் வரவில்லை.

அரை கிலோ ரூ.20! சென்னையில் மழை பாதித்த பகுதிகளில் வீடு தேடி வரும் காய்கறிகள்!

Son went in search of his father in the Chennai floods dies, body found after 3 days sgb

இரண்டு நாள்களுக்குப் பிறகு குடும்பத்தினர் தந்தை, மகன் இருவரையும் தேடி வீட்டுக்குச் சென்றனர். அப்போது முருகன் மட்டும் வீட்டு மாடியில் பாதுகாப்பாக இருந்துள்ளார். அவரிடம் மகன் அருண் பற்றிக் கேட்டபோது, அவர் வீட்டுக்கு வரவே இல்லையே என்று தெரிவித்திருக்கிறார்.

இதனால், குடும்பத்தினர் அருண் காணாமல் போனதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில்  வியாழக்கிழமை காமகோடி நகரில் உள்ள ஒரு முட்புதருக்குள் ஆண் சடலம் ஒன்று அழுகிய நிலையில் மிதப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்குத் தகவல் வந்துள்ளது.

உடனடியாக அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை செய்ய குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் நடத்திய விசாரணையின்போது, சடலமாக மீட்கப்பட்டது காணாமல் போன அருண் என்று தெரியவந்தது. அருணின் குடும்பத்தினரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அருண் தனது அப்பாவைத் தேடிப் போனபோது வெள்ளத்தில் சிக்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் அருண் உயிரிழந்தது எப்படி என்று தெரியும் என்று போலீசார் தெரிவிக்கின்றனர். வெள்ள பாதிப்புகளுக்கு மத்தியில் நடந்த இந்தச் சம்பவம் பள்ளிக்கரணை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2024ஆம் ஆண்டில் இஸ்ரோவின் 10 திட்டங்கள் என்னென்ன? மத்திய அரசு தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios