தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சமூக பரவல் அடைந்துவிட்டதா என்பது குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது. 

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 74,281ஆக உள்ளது.  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும், நோய் பரவல் வேகமெடுத்துக்கொண்டே செல்கிறது. அதேபோல், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் இதுவரை 8,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சென்னையில் மட்டும் 4,882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல், மூன்றாம் நிலையான சமூக பரவல் நிலையை அடைந்துவிட்டதா என இந்திய மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ய உள்ளது. இதற்காக நாடு முழுவதும் வைரஸ் தொற்று அதிகமுள்ள 69 ஹாட் ஸ்பாட் மாவட்டங்களில், மத்திய சுகாதாரத்துறையுடன் இணைந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. குறிப்பிட்ட மாவட்டத்தின் 10 இடங்களில், 400 ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

சமூக பரவல் என்பது கொரோனா வைரஸ் பாதிப்பை, நான்கு நிலைகளாக மருத்துவ நிபுணர்கள் வரையறை செய்துள்ளனர். இதன்படி, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது, முதல் நிலை. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது இரண்டாவது நிலை. வெளிநாடுகளுக்கு செல்லாதோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களுக்கு, வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு, இந்த பாதிப்பு எப்படி வந்தது என கண்டுபிடிக்க முடியாத நிலை, சமூக பரவல் என கூறப்படுகிறது. இது, மூன்றாவது நிலை. கடைசியாக, நாடு முழுவதும் அனைவருக்கும் வைரஸ் பரவி, பேரழிவை ஏற்படுத்துவது நான்காவது நிலை என்பது குறிப்பிடத்தக்கது.