சென்னையில் கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டவருக்கு பக்கவிளைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருத்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. 

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணயில் ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம், அகமதாபாத்தைச் சேர்ந்த ஜைடஸ் பயோடெக் பார்க், புனேயில் உள்ள சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் ஆகியவை ஈடுபட்டுள்ளன. இந்த மூன்று நிறுவனங்களும் 2,வது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருப்பதால், மருந்து தயாரிப்பு பணிகளை நேரடியாக பிரதமர் மோடி ஆய்வு செய்தார்.

இந்நிலையில், தமிழகத்தில், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைகழகத்தில், கோவிஷீல்டு தடுப்பு மருந்து, எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறதா என கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. இதில், சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது ஆண் ஒருவருக்கு, இந்த பல்கலைக்கழகத்தில் கோவிஷீல்டு தடுப்பு மருத்து செலுத்தப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி தடுப்பு மருந்து எடுத்துக்கொண்ட அவருக்கு, அடுத்த 10 நாட்களில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், தலைவலி உள்ளிட்ட பக்கவிளைவு ஏற்பட்டதால் சிகிச்சையில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது. இதனால், உரிய இழப்பீடு கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில், ராமச்சந்திர மருத்துவமனைக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பு மருத்து எடுத்துக்கொண்டவர்களுக்கு, பக்கவிளைவு ஏதும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அத்துடன், ராமச்சந்திர மருத்துவமனை விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.