தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து, அப்பகுதி மக்கள், சரமாரியாக தாக்கி, கம்பத்தில் கட்டி வைத்து உரித்தனர். இச்சம்பவம் சேலம் அடுத்த ஆத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சித்தேரி கிராமத்தில் கூலி தொழிலாளி குடும்பத்தினர் வசிக்கின்றனர். தற்போது, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவர்கள் வீட்டின் கதவை காற்றுக்காக திறந்து வைத்து தூங்குவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, கூலி தொழிலாளி குடும்பத்தினர் வேலைக்கு சென்று வீடு திரும்பினர். பின்னர், சாப்பிட்டு முடித்து அனைவரும், வழக்கம்போல் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கினர். அசதியில் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர்.

அந்த நேரத்தில், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர், அவ்வழியாக சென்றார். அப்போது, கூலி தொழிலாளியின் வீடு திறந்து இருப்பதையும், உள்ளே தொழிலாளியின் மனைவி தூங்கி கொண்டிருந்ததை பார்த்தார். உடனே, வீட்டில் நுழைந்த அவர், பாலியல் சில்மிஷம் செய்துள்ளார்.

இதனால், திடுக்கிட்டு எழுந்த அந்த பெண், அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்களை கண்டதும், அந்த வாலிபர், அங்கிருந்து தப்பியோட முயன்றார். உடனே பொதுமக்கள், அவரை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதில், அந்த வாலிபர் படுகாயமடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆத்தூர் போலீசார், பொதுமக்களின் பிடியில் படுகாயமடைந்து இருந்த வாலிபரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.