சென்னையில் கொரோனா பாதிப்பை குறைக்க பகுதிவாரியாக திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- சென்னையை பொறுத்தவரை பொது மக்களின் ஒத்துழைப்பு தேவை. நோய் தொற்று உள்ளவரை தொடுவதால் வாய், மூக்கு வழியாக பரவுகிறது. வீட்டில் இருந்தாலும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.  கை கழுவ வேண்டும். அச்சப்பட வேண்டாம்.  மக்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை எதிர்ப்பார்க்கிறோம். 70-75 சதவீதம் பேருக் பிறரை சந்திப்பதன் மூலமே நோய் பரவுகிறது. குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே சென்னையில் தான் அதிக அளவிலான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், பேசிய அவர் பகுதி வாரியாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட நோய் அதிகம் உள்ள 10 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரத்தில் தொற்று அதிகமுள்ள இடங்களில் உள்ளவர்கள் இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2000 குடியிருப்புகள் நோய் பாதிப்புக்கான இடங்களாக கண்டறிந்து முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம், வளசரவாக்கம் சவாலான மண்டலம். இங்கு வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கி வருகிறோம். தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை பகுதிகளில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. சுய உதவி குழுக்கள் மூலம் நோய் கண்டறியும் பணி மற்றும் காய்ச்சல் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறை, வருவாய் துறை மூலம் 3 அடுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 80 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல்தான் கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. சென்னையில் மட்டும் 50 லட்சம் மாஸ்க்குகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.