Asianet News TamilAsianet News Tamil

Chennai Rain : சென்னையில் 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் குடிநீர் விநியோகம்.. உதவி எண்கள் அறிவிப்பு.!

வடகிழக்குப் பருவமழையின்போது நாளொன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.

Secure drinking water supply in Chennai through 444 trucks...chennai corporation water tvk
Author
First Published Dec 8, 2023, 12:25 PM IST

மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் இதுவரை 45 இலட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது என சென்னை குடிநீர் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் 07.12.2023 அன்று பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 42 நீர் நிரப்பும் நிலையங்களிலிருந்து 444 லாரிகள் மூலம் 4227 நடைகள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது. மேலும் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் அனைத்து பகுதிகளிலும் சீராக வழங்கப்பட்டது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு லாரிகள் மூலம் நேரடியாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் செயல்படக்கூடிய 74 நிவாரண முகாம்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடங்களுக்குத் தேவையான குடிநீர் சென்னை குடிநீர் வாரியத்தால் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் 116 அதிவேக நீர் உறிஞ்சும் இயந்திரங்களை கொண்டு கழிவுநீரை வெளியேற்றுவதோடு, பிரதான கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்புகளை 476 தூர்வாரும் இயந்திரங்கள் மற்றும் ஜெட்ராடிங் இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கிய 263 இடங்களில் மோட்டார்களைக் கொண்டு மழைநீர் அகற்றப்பட்டது. மேலும், 325 கழிவுநீர் உந்து நிலையங்களில் 179 ஜெனரேட்டர்களைக் கொண்டு தொய்வில்லாமல் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கழிவுநீர் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழைநீர் தேங்கிய பகுதிகளில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் இதுவரை 45 இலட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழைக்காலங்களில் பொதுமக்கள் குடிநீரைப் காய்ச்சிப் பருகவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கும் பொருட்டு தினசரி 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு குடிநீரின் தரம் ஆய்வகம் மூலம் பரிசோதிக்கப்பட்டுவரும் நிலையில் தற்போதைய வடகிழக்குப் பருவமழையின்போது நாளொன்றுக்கு 600 இடங்களில் குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது.

மேலும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வாயிலாக லாரிகள் மூலம் குடிநீர் பெற பொதுமக்கள், கட்டணமில்லா தொலைபேசி எண்.1916 மற்றும் 044-4567 4567 (20 இணைப்புகள்) ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். தெரு நடைகள், குடிநீர் வாரியத்தின் குடிநீர்த் தொட்டிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கு இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios